ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றிக்காக தமிழக அரசு மாவட்டத் தலைநகரங்களில் ஜல்லிக்கட்டு காளை சிலைகளை அமைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டையில் மகளிர் கல்லூரி அருகே 4 சாலைகளின் சந்திப்பில் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற ஒரு வெண்கல சிலையை கடந்த மாதம் திறந்தார்கள். அந்த சிலையை பார்க்கும் பலரும் செல்பி எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் தான் சனிக்கிழமை மாலை அந்த ஜல்லிக்கட்டு காளையின் இடது பக்க காதை காணவில்லை. ஜல்லிக்கட்டுக் காளையின் காதை உடைத்துச் சென்றது யார் என்று போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும் உடைப்பது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ந் தேதி புதுக்கோட்டைவிடுதியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. கஜா புயல் நேரத்தில் புதுக்கோட்டை நகரில் அமைக்கப்படிந்த பெரியார் நினைவு சின்னம் உடைக்கப்பட்டது. கடந்த 8 ந் தேதி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இப்போது காளை சிலை உடைக்கப்பட்டுள்ளது. இப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது.