ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்கு அருகில் பொதுக்கூட்டத்திற்கான மேடையை அமைக்க ஆளும் தமிழக அரசு முயற்சிக்க, மாணவிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சியினரும் இணைந்து மேடை அமைக்க எதிராக வரிந்து கட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், நகராட்சி பூங்கா எதிரிலும், ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்கான காம்பவுண்ட் சுவரை ஒட்டியும் பொதுக்கூட்ட மேடை (சீரணி அரங்கம்) அமைப்பதற்கு அதிமுக முன்னாள் எம்.பி.யான செந்தில்நாதன் தனது எம்.பி.நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியினை ஒதுக்கி, அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அடிக்கல்லையும் நாட்டினார். இதற்கான பூர்வாங்க வேலையும் நடைப்பெற்றன. இந்நிலையில், "இங்கு சீரணி அரங்கம் அமைக்க திட்டமிட்டதே தவறு.! ஆதிதிராவிடர் மாணவியர் தங்கும் விடுதி அருகில் சீரணி கலை அரங்கம் கட்டி பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் மாணவிகள் எவ்வாறு படிக்க முடியும்.? கண்டிப்பாக அவர்களது கவனம் சிதறி படிப்பு பாதிக்கப்படும்.

அதுபோக, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் விடுதிக்குள் சமூக விரோதிகள் உள் நுழையவும் வாய்ப்புண்டு. அதே வேளையில், காரைக்குடி பழைய அரசு பொதுமருத்துவமனைக்கு செல்லும் பாதை இது என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும், அவசர விரைவு ஊர்தி செல்ல முடியாத நிலையும் ஏற்படும். ஆதலால் காரைக்குடி நகராட்சி அனைத்துக்கட்சி மற்றும் பொதுமக்களின் கருத்தைக்கொண்டு இந்த இடத்தில் சீரணி அரங்கம் அமைவதை உடனே தடுத்து நிறுத்தி, வேறொரு இடத்தில் சீரணி அரங்கை அமைக்கவேண்டுமென." நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கையை வைத்துள்ளனர் அனைத்துக் கட்சியினரும்.
மாவட்ட நிர்வாகம் மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா..?