ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து கர்நாடகா செல்வதற்கு திம்பம் மலைப்பாதை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இங்கு யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதேபோல் சமீபகாலமாக திம்பம் மலைப்பகுதியில் உடும்புகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பண்ணாரி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உடும்புகள் நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் திம்பம் மலைப்பகுதியில் 12-வது கொண்டை ஊசி வளைவில் சாலையோரம் இரண்டு உடும்புகள் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கவனித்து வாகனத்தை நிறுத்தி தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டனர். சிறிது நேரம் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்ட உடும்புகள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.