தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. மே 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவுற்றதை அடுத்து, அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை (மார்ச் 10) மாலை வெளியிட்டது. இரண்டாம் கட்ட பட்டியலில் மொத்தம் 171 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளில் களமிறங்குகிறது. பாமகவுக்கு சேலம் மேற்கு, மேட்டூர் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி அல்லது ஆத்தூர் மற்றும் சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளை எதிர்பார்த்து அழுத்தம் கொடுத்து வந்த பாஜகவுக்கு, ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.
எடப்பாடி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்குகிறார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோதே அவர் பெயர் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்ட இரண்டாம்கட்ட பட்டியலில், சேலம் மாவட்டத்தில் அதிமுக போட்டியிடும் மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
கெங்கவல்லி (தனி):
வேட்பாளர்: அ.நல்லதம்பி
வயது : 55
ஊர்: கோவிந்தம்பாளையம்
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு
தொழில்: விவசாயம்
பதவி: கோவிந்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்
ஆத்தூர் (தனி):
வேட்பாளர்: ஏ.பி.ஜெயசங்கரன்
வயது: 50
ஊர்: தெற்கு உடையார்பாளையம்
கல்வித்தகுதி: டிப்ளமோ
தொழில்: கிரானைட் தொழில்
கட்சிப் பதவி: ஆத்தூர் நகர எம்ஜிஆர் மன்றச் செயலாளர், அறிஞர் அண்ணா கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவராகவும் உள்ளார்
ஏற்காடு (தனி):
வேட்பாளர்: கு.சித்ரா (சிட்டிங் எம்எல்ஏ)
ஊர்: மஞ்சக்குட்டை, ஏற்காடு
வயது: 40
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு
தொழில்: விவசாயம்
கட்சிப் பதவி: பொதுக்குழு உறுப்பினர்
ஓமலூர்:
வேட்பாளர்: ஆர்.மணி
வயது: 41
ஊர்: பெரியேரிப்பட்டி, ஓமலூர்
கல்வித்தகுதி: பி.ஏ., பி.எல்.,
தொழில்: வழக்கறிஞர், பெட்ரோல் பங்க் வைத்துள்ளார்
கட்சிப் பதவி: ஓமலூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு 10வது வார்டு உறுப்பினராக உள்ளார்
சங்ககிரி:
வேட்பாளர்: எஸ். சுந்தரராஜன்
வயது: 50
ஊர்: கத்தேரி, சங்ககிரி
கல்வித்தகுதி: பி.ஏ.,
தொழில்: விவசாயம், விசைத்தறி
கட்சிப் பதவி: சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலாளர்
சேலம் வடக்கு:
வேட்பாளர்: ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ
கட்சிப் பதவி: சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர், சேலம் மேற்கு எம்எல்ஏ ஆகவும் உள்ளார்.
தொழில்: விவசாயம்
சேலம் தெற்கு:
வேட்பாளர் பெயர்: இ.பாலசுப்ரமணியன்
வயது: 60
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: பி.காம்., சி.ஏ., (பட்டயக் கணக்காளர்)
தொழில்: ஜவுளித்தொழில் மற்றும் சொட்டு நீர்பாசன உபகரண முகவர்
கட்சிப் பதவி: ஜெயலலிதா பேரவை சேலம் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர். ஏற்கனவே இரண்டு முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார்.
வீரபாண்டி:
வேட்பாளர்: எம்.ராஜா என்கிற ராஜமுத்து
கல்வித்தகுதி: பி.ஏ.,
கட்சிப் பதவி: பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றச் செயலாளர்
.
எடப்பாடி:
எடப்பாடி தொகுதியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (66) போட்டியிடுகிறார். தொழில், விவசாயம். இதே தொகுதியில் ஏற்கனவே 1989, 1991, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். திருச்செங்கோடு எம்பி ஆகவும் இருந்துள்ளார். கட்சியில், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்
சேலம் மாவட்டத்தில் அதிமுக மூத்தத் தலைவர்களுள் ஒருவரும், மேட்டூர் சிட்டிங் எம்எல்ஏவுமான செம்மலைக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது செம்மலை, ஓபிஎஸ் அணிக்குத் தாவியதுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.
பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து பிறகும் கூட அவர் செம்மலைக்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கட்டாயத்தின் பேரில் அவர், எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம் காட்டி வந்தார். இதையெல்லாம் மனதில் வைத்துதான் அவருக்கு இந்தமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என சொல்கிறார்கள் ர.ர.க்கள். வயது மூப்பும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அதேபோல், சிட்டிங் எம்எல்ஏக்களான சேலம் தெற்கு தொகுதி சக்திவேல், ஓமலூர் தொகுதி வெற்றிவேல், வீரபாண்டி தொகுதி மனோன்மணி, சங்ககிரி தொகுதி ராஜா, ஆத்தூர் தொகுதி சின்னதம்பி, கெங்கவல்லி தொகுதி மருதமுத்து ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.
சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்களில் சீனியர் செம்மலைக்கு மட்டும் ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்படும் என கட்சிக்குள் பேசப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு சேலம் மேற்கு, மேட்டூர் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சேலம் மேற்கில் இளைஞரணி மாநிலச் செயலாளர் இரா. அருள் போட்டியிடுவார் என பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.