மதுவிலக்கு மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராகி வரும் நிலையில் அண்மையில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அதில் திமுகவுடனான கூட்டணி குறித்து கருத்துகளைத் தெரிவிக்கையில், “விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது. குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்” எனப் பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் திமுக - விசிக இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அது அவரது தனிப்பட்ட கருத்து என வன்னியரசு உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “திமுக - விசிக ஆகிய கூட்டணிக் கட்சிகள் இடையே எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை'' என்றார். அதனைத்தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆ. ராசா எம்பி. வலியுறுத்தியுள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இது தொடர்பாகக் கட்சியில் முன்னணி தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களைக் கலந்து பேசி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திமுக தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''புகழுக்காக எதையாவது சொன்னால் பிரபலமாகலாம் என ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசி வருகிறார். விசிகவின் தலைவர் திருமாவளவனே தெளிவுபடுத்திய பிறகு கீழேயுள்ள யார் எதைச் சொன்னால் என்ன? இந்தியாவிலேயே தமிழக சட்டக் கல்லூரிகளில்தான் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அரசியலமைப்புக்கு முரணாக செல்லும் இடங்களிலெல்லாம் தமிழக ஆளுநர் பேசி வருவது கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளார்.