திருச்சியில் ஹெல்மெட் சோதனையின் போது போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் தாக்கியதில் நேற்று மரணம் அடைந்த கர்ப்பிணி உஷா உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. திருச்சி கே.கே.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உஷாவின் உடலுக்கு இன்று காலை தமிழக பா. ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மோட்டார் சைக்கிளில் சென்ற போது தாக்கப்பட்டதால் கீழே விழுந்து உயிர் இழந்த உஷாவின் மரணம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் முறையற்ற செயலால் நடந்துள்ளது. காவல் துறையின் தவறான நடவடிக்கையை இது காட்டுகிறது. அத்துமீறலும் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளின் பின்னாலேயே துரத்தி சென்று போலீசார் உதைத்ததாக கூறுகிறார்கள். விபத்து நடந்ததில் இருந்து உஷாவின் கணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை, பிரேத பரிசோதனை செய்து உஷாவின் உடலை ஒப்படைப்பது வரை உறவினர்கள் கஷ்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நியாயம் கிடைக்காத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் ஒரு முறை உள்ளது. இதற்கு முன்பு சென்னையில் ஒரு கார் டிரைவர் பெல்ட் அணியாததற்கு போலீசாரின் கடுமையான வார்த்தைகளால் தற்கொலை செய்தார். சில நாட்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்திற்குள் சென்றால் நீதி கிடைக்காது என்பதற்காக ஒருவர் போலீஸ் நிலையம் வாசலில் தீக்குளிக்கிறார். இப்படி தான் காவல் துறையின் செயல்பாடு உள்ளது.
காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் நடத்திய 3 நாள் மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி போலீசார் அந்தந்த மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். ஆனால் எங்கும் முறையான நடவடிக்கை இல்லை. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் யாத்திரை செல்வது போல சென்று அய்யாக்கண்ணுவுடன் சென்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்ததை பா.ஜனதா பெண் பிரமுகர் தட்டிக்கேட்ட போது அவரை காதில் வாங்க முடியாத அளவிற்கு வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாது. அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் கோவிலுக்குள் நோட்டீஸ் கொடுக்க அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? இதற்கு முதலில் பதில் கூற வேண்டும். மகளிர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
எங்கள் கட்சியைச் சேர்ந்த ஐ.டி.பிரிவு உஷா ரெயிலில் இருந்து விழுந்து தற்கொலை செய்துள்ளார். மற்றொரு ஐ.டி. பிரிவில் பணியாற்றும் பெண்ணின் செயினை பறித்துள்ளனர். தமிழகத்தில் என்னதான் நடக்கிறது. தமிழக அரசும் காவல் துறை அதிகாரிகளும் இதை தெளிவுப்படுத்த வேண்டும். அய்யாக்கண்ணுவை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.