தங்கள் குழந்தைகளை சி.பி.எஸ்.இ. பள்ளியில் சேர்த்ததால் தங்கள் உயிருக்கு கிராமநிர்வாக கமிட்டியினரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காயல்பட்டணம் அருகே உள்ள கொம்புத்துறையை சேர்ந்த மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அருகேயுள்ள கொம்புத்துறையை சேர்ந்த ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், " நானும் என் உறவினர்களும் ஆறுமுகநேரியிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில், எங்களது குழந்தைகளை சேர்க்க முயன்ற போது, கொம்புதுறை ஊர் கமிட்டியினர் கொம்புத்துறையிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தான் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென ஊர்சட்டம் போட்டனர். ஊர்சட்டத்தை மீறி,எங்கள் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்த்ததால் ஊர் கமிட்டியினர் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். கடல் தொழில் செய்யவும் எங்களை அனுமதிப்பதில்லை. ஊர் கமிட்டியினரால் பள்ளி செல்லும் எங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம். ஆகவே மாவட்டஆட்சியர் எங்களுக்கு பாதுபாப்பு அளிப்பதுடன் ஊர்கமிட்டி விதித்த தடையினை நீக்கி உத்தரவிட வேண்டுமென," கோரிக்கை வைத்து உள்ளனர்.