Skip to main content

“மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
We will seek people's forum and court" - Chief Minister M.K. Stalin

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான மாநில ஆளுநரே முடிவு செய்வார் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) புதிய விதி விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்கலைக்கழக தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூ.ஜி.சி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் எனவும் மற்றொரு உறுப்பினராக, பல்கலைக்கழகத்தின் சார்பில் பரிந்துரைப்பவர் இருப்பார் எனவும் யூ.ஜி.சி. புதிய விதியை கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாகப் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். இதனையடுத்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பேசியது சட்டமன்றப் பேரவையில் தொடர்பான காணொளியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள். இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்.

இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?. தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான்  பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கான வரைவு. இதனை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம். வெல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்