செந்தில் பாலாஜி மீதான கீழ் நீதிமன்ற வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதம் பணப் பரிமாற்றம் மற்றும் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளை தமிழக அரசு வேண்டும் என்று தாமதம் செய்கிறது. இந்த விவகாரத்தில் நடுநிலையான வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
தமிழக அரசு சார்பில் வாஷிங்டன் தனசேகர் என்பவர் வழக்கு விசாரணைக்காக சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், கடந்த ஜனவரி மாதமே நாங்கள் இந்த வழக்கு விசாரணைக்கான ஒப்புதலை கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு அறிக்கைகளையும் ஆவணங்களையும் சமர்ப்பித்த நிலையில் ஆளுநர் கையொப்பம் இடாமல் இழுத்தடிப்பு செய்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். ஏழு மாதங்களாக ஏன் தமிழ்நாடு ஆளுநர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களில் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்திருக்கிறார் என்ற கேள்வியை வைத்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு சார்பாக நியமிக்கப்பட்ட வாஷிங்டன் தனசேகர் என்ற சிறப்பு வழக்கறிஞர் அவருடைய கடமையை சரிவர உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு விசாரணை தொடர்பான கீழ் நீதிமன்ற நீதிபதிகளை தொடர்ந்து கண்காணிக்கிறோம். இந்த வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நேரடியாக கண்காணிக்க இருக்கிறோம். வழக்குகளின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையையும் தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்து அக்டோபர் 30 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.