
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் கடந்த 19ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கும்பலால் காரில் வைத்தே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் மூன்று பேரை சித்தோடு போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையத்தில் பதுங்கி இருந்த மேலும் 5 பேரை சித்தோடு போலீசார் கைது செய்தனர். அதேசமயம் இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஜீவகன் உள்பட 4 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பிரபல ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்தது.
செல்லத்துரையை ஜான் மற்றும் அவரது தரப்பினர் படுகொலை செய்தனர். அதற்கு பழி வாங்குவதற்காக ஜாலியன் தம்பி ஜீவகன் தனது கூட்டாளிகளுடன் ஜானை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சூழலில் தான் ஜானின் மனைவி சரண்யா செல்லதுரையின் இரண்டு மனைவிகளுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாகவும், கொலை செலவுக்காக நகைகளை அடமானம் வைத்து பணத்தை பெற்றதாகவும் அவர் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, செல்லத்துரையின் இரண்டு மனைவிகளும் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சேலம், கிச்சிபாளையம் கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் (30) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்துள்ளனர். இவரையும் சேர்த்து ஜான் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி இன்னும் மூன்று நாட்களில் காவலில் எடுக்கப்பட இருக்கிறது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்குமா என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.