திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இதுவரை ரூ 56 லட்சம் பறிமுதல் செய்துள்ளதாக பெருமைபடுகிறார்கள்.
கடந்த 10 ஆம் தேதி 17 வது மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 24 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுமாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அனுப்பப்படுகின்றன.
இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள முகந்தனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது. வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சொகுசு காரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் ஆவணங்கள் இல்லாமல் இருந்த 3 லட்சத்து 18ஆயிரத்து 500 ரூபாயை கைப்பற்றினர். அந்த தொகையின் உரிமையாளரான தஞ்சாவூரை சேர்ந்த பென்னிரபெல் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதுகுறித்து அங்கிருந்தபடியே கவனித்த பொதுமக்கள் கூறுகையில், " தை மாதம் துவங்கி விட்டாலே திருமணம், காதுகுத்து ,வளையணி விழா, கோயில் திருவிழா, என விசேஷங்கள் துவங்கிவிடும். இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும்.
அவரவர்கள் சொந்த தேவைக்கும், விஷேஷங்களுக்கு புடவை எடுக்க, நகை எடுக்க, வீட்டுக்கான பொருட்கள் வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்து அவர்களை அலைக்கழிப்பது வேதனையாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் கார்களை கண்டால் அதிவிரைவு படை அதிவேகமாக ஒதுங்கி நிற்பதும். பொதுமக்களின் கார்களை கண்டால் அதிரடியாக சுற்றிவளைப்பதும் வேதனையாக இருக்கிறது.
தேர்தல் வந்துவிட்டாலே மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளாக மாறிவிடுகின்றனர். அது எப்படி சாத்தியம் ஆகிறது என்பதுதான் புரியவில்லை. மாவட்ட ஆட்சியர் எப்போதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கும் ஆதரவாக இருந்து வருவது அப்பட்டமாகவே தெரிகிறது. அதேபோல் மாவட்ட காவல் அதிகாரியில் துவங்கி கீழ்மட்ட காவலர்கள் வரை ஒவ்வொரு ஏரியா அரசியல்வாதிகளிடமும் இனக்கமாக இருப்பதும் மக்களுக்கு நன்கு தெரிந்தது தான். இந்த சமயத்தில் அரசியல்வாதிகள் கொண்டு வரும் பணத்தை அவர்கள் எப்படி பிடிப்பார்கள் வேறு மாநிலத்திலிருந்தா காவலர்கள், அதிகாரிகள் வந்து பிடிக்கிறாங்க. இதற்கெல்லாம் நிச்சயம் ஒரு நாள் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்." என்றனர்.