![IG Ponmanikavel Aaivu](http://image.nakkheeran.in/cdn/farfuture/35avfuyv12xSWQPR9t9Z5a5gQ-3ruTyj4nXGCOVow4I/1533347626/sites/default/files/inline-images/IG%20Ponmanikavel%20Aaivu%20%283%29.jpg)
முருக பெருமானின் ஆறு படை வீடகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் இருந்து வருகிறது. இந்த பழனி மலையில் உள்ள மூலஸ்தானத்தில் உள்ள சிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் என்னும் சித்தரால் உருவாக்கப்பட்டது. அதோடு மருத்துவ குணம் நிறைந்த இந்த சிலை சேதமடைந்து இருப்பதாக கூறி மாற்று சிலை வைப்பதற்காகத்தான் கடந்த 2004ம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது.
![IG Ponmanikavel Aaivu](http://image.nakkheeran.in/cdn/farfuture/4RuytJVD8IuM7Eo_XOPRGlEMk2UDmlmV8s3_FueOpsg/1533347626/sites/default/files/inline-images/IG%20Ponmanikavel%20Aaivu%20%284%29_0.jpg)
அதன் அடிப்படையில் 200 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன புதிய சிலை தயாரிக்கப்பட்டு அதை பழனி மலையில் உள்ள மூலவர் சிலை முன்பாக அந்த சிலை வைக்கப்பட்டது. இந்த புதிய சிலைக்கும் எப்போதும் போல் நவபாசன சிலைக்கு ஆறுகால பூஜை செய்வதுபோலவே இந்த ஐம்பொன் சிலைக்கும் செய்து வந்தனர். ஆனால் ஒரே கருவறையில் இரண்டு மூலவர் இருக்கக்கூடாது அதை உடனே அகற்ற வேண்டும் எனக் கூறி பக்தர்கள் போராடியதின் பேரில் 2004 ஜுன் 6ம் தேதி அந்த ஐம்பொன் சிலை அகற்றப்பட்டது. அதன்மூலம் மீண்டும் நவபாசானத்தால் ஆன முருகன் சிலைக்கு வழக்கம்போல் ஆறுகால பூஜை நடைபெற்றது.
![IG Ponmanikavel Aaivu (3).jpg](http://image.nakkheeran.in/cdn/farfuture/TF4yF2CsX4qk5PSrjcR7NRM15k7iC860v1wc6nbdYMg/1533347656/sites/default/files/inline-images/karuthu%20pona%20impon%20silai.jpg)
இந்த நிலையில்தான் விலை மதிப்பில்லாத நவபாசன சிலையை சிலர் வெளிநாட்டுக்கு கடத்தி விற்க முயற்சி செய்வதாகவும் ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது. அதை தொடர்ந்து ஏற்கனவே செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை ஆய்வு செய்தபோது தான் மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.
![IG Ponmanikavel Aaivu (3).jpg](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ddhdq9jJMxVCanTSB5lWUw98uSLHjf7qEU4G2qE0ALE/1533347688/sites/default/files/inline-images/visaranaikku%20vnadh%20kovil%20adhigarigalr.jpg)
அதன் அடிப்படையில் அப்போதைய கோயில் முன்னாள் இணை ஆணையரான ராஜா மற்றும் ஸ்தபதி முத்தையாவை கடந்த சில மாதங்களுக்க முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனிக்கு விசிட் அடித்து தற்போது கோயில் இணை ஆணையரான செல்வராஜ், மேனேஜர் உமா உள்பட சில அதிகாரிகளை வரச்சொல்லி அதிரடி விசாரணை செய்து 2004 முதல் 2018 வரை கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் பட்டியலையும், அதோடு பல ரிக்கார்டுகளை சிலை தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி அதிரடி விசாரணையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த 20 நாட்களுக்கு பிறகு இந்த வழக்கை எடப்பாடி அரசு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றியது. இதனால் பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
சிலை மோடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்தபதி முத்தையாவும், முன்னாள் கோயில் இணை ஆணையர் ராஜாவும் திருச்சி சிறையில் இருந்து வருபவர்கள். முன்ஜாமீன் கேட்டு தஞ்சாவூர் கோர்ட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது திடீரென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்மாணிக்கவேல் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய போது, நீதிமன்ற உத்தரவுப்படி இவ்வழக்கை விசாரித்து மனுதாரர்களை கைது செய்து விசாரணையை சிபிசிஐடிக்கு அரசு மாற்றியது என்பது நிர்வாக ரீதியான உத்தரவு. இருந்தாலும் மனுதார்களை ஜாமினில் அனுமதித்தால் இதுபோன்ற வழக்கில் தொடர்புயைடவர்களும் ஜாமின் கேட்பார்கள்.
மூலவர் சிலையை கடத்தும் நோக்கத்தில் சம்பவம் நடந்துள்ளதால் அது பிரதான குற்றமாகும். இது கொலை குற்றத்தை விட மோசமாக கருதுவதால் அவர்களை ஜாமீனில் அனுமதிக்க கூடாது. ஏற்கனவே சர்வதேச சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபுரூக்கு புற்றுநோய் இருந்தும்கூட தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வெளியில் விடவில்லை. இதுபோல் வல்ல பிரகாஷ், தினதயாளனையும் வெளியில் விடவில்லை என தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதியரசர் சாமிநாதனோ, இவ்வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெடர்ந்து விசாரிக்க வேண்டும். அதனால் சிபிசிஐடிக்கு மாற்றிய வழக்கை மீண்டும் சிலை கடத்தல் பிரிவிற்கு மாற்ற உத்தரவிட்டார். அதோடு அவரது பணியும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. மேலும் ஜாமீன் கேட்ட மனுதாரர்களுக்கு தொண்ணூறு நாட்களுக்கு ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பரிந்துரைக்கும் போலீஸ் கண்காணிப்பில் தான் இருக்க வேண்டும்.
அதுபோல் மனுதாரர்கள் வீடுகளில் டெலிபோன், அலைபேசிகளை பயன்படுத்த கூடாது. அவசியம் ஏற்படுவதின் பேரில் போலீசாரின் கைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். போலீஸ் பாதுகாப்பு செலவுகளை இந்த மனுதாரர்கள் ஏற்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மனுதாரர்கள் மீறினால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதை தொடர்ந்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஸ்தபதி முத்தையாவும், ராஜாவும் நிபந்தனை ஜாமீனில் வந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏற்கனவே ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை வாங்கிக்கொடுப்பேன் என வெளிப்படையாகவே கூறி வந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு பொன்மாணிக்கவேல் கைக்கு வந்ததின் மூலம் குற்றவாளியான ஸ்தபதி முத்தையாவுக்கும், ராஜாவுக்கும் ஆயுள் தண்டனை கூட கிடைக்கலாம் என காக்கிகள் மத்தியிலேயே ஒரு பேச்சும் பரவலாக இருந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து மீண்டும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் பழனிக்கு விசிட் அடித்து சிலை மோசடி விசாரணையை துரிதப்படுத்த இருப்பதைக் கண்டு கோயில் பணியாளர்கள் பலர் அதிர்ச்சியில் அரண்டுபோய் உள்ளனர். அதோடு இன்னும் ஐந்து மாதத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வு பெற போவதால் அதற்குள் இந்த சிலை மோசடி வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுக்க அதிரடி விசாரணையில் களமிறங்கியிருக்கிறார்!