திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,"சூழலியலைத் தகர்க்கும் சட்டம்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை- 2020 குறித்த கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், மூத்த பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம், வழக்கறிஞர் ரித்விக் தத்தா, சூழலியல் செயற்பாட்டாளர்கள் லியோ சல்தான்ஹா மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இவர்களோடு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் செய்தித்தொடர்பாளர்கள் இந்தக் காணொளி நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த காணொளி கருத்தரங்கில் பேசிய தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், "மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை. திட்டங்கள், தொழிற்சாலைகளை தி.மு.க. எதிர்க்கவில்லை. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இருக்கக்கூடாது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கை அமலானால் மக்கள் விரோத திட்டங்கள் பற்றி கேள்வி கேட்க முடியாது. ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் பற்றி கேள்வி கேட்க முடியாது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது" என்றார்.