திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டி வீரப்பள்ளி பகுதியில் தனியார் பள்ளிக்கு அருகாமையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அவ்வழியாகச் சென்ற குரங்கு ஒன்று தாவி செல்லும் பொழுது மின்சாரம் தாக்கி சுயநினைவின்றி கீழே விழுந்தது.
அப்போது அந்தத் தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரியும் முருகன் என்பவர் உடனடியாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கின் அருகே ஓடிச்சென்று பார்த்தவர் அதற்கு உயிர் இருப்பதை அறிந்து ஓடிபோய் தான் பயன்படுத்தும் குடிநீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி அதற்கு குளிப்பாட்டி ஒரு துணியால் அதைச் சுத்தம் செய்து கருணையுடனும் மனிதநேயத்துடனும் செயல்பட்டுள்ளார். பின்னர் அந்த குரங்கிற்கு மீண்டும் சுயநினைவை கொண்டு வந்தார்.
அதுமட்டுமின்றி அந்தக் குரங்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததால் ஏற்பட்ட ரத்த காயங்களுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்பதற்காக உடனடியாக அருகாமையில் இருந்த மருந்து கடையில் காயத்திற்கு போடும் மருந்து வாங்கி வந்து அதற்கு முதல் உதவி செய்தார்.
பின்பு பள்ளியில் விடுப்பு வாங்கிக்கொண்டு அடிப்பட்ட அந்தக் குரங்கை தூக்கிக்கொண்டு தியானம் பகுதியில் இயங்கும் அரசு கால்நடை மருத்துவமணைக்கு எடுத்துச் சென்று குரங்குக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.