கோவையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி எலினா நுரேட்டா (வயது 15). கூடைப்பந்து வீராங்கனையான இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சக மாணவிகளுடன் எலினா மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் சென்றுள்ளார். அதன் பின்னர் விளையாட்டுப் போட்டிகளை 15ஆம் தேதி விளையாட்டுப் போட்டி முடித்துவிட்டு அங்கிருந்து ரயில் மூலம் சென்னை உள்ளார்.
இவர் ரயிலில் வந்தபோது வழியில் மாணவிக்கு உடல் வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் பகுதியில் வசிக்கும் பெரியப்பா மற்றும் தாய் மாமாவிடம் கூறியுள்ளார் இதனையடுத்து பள்ளி மாணவி எலினாவை உடனடியாக அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதற்காக மாணவியை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் உயிரிழப்பு குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குவாலியரில் விளையாடும் போதே மாணவிக்கு உடல்நல குறைபாடு இருந்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் மாணவி ரயிலில் வரும்போது ஆன்லைன் மூலம் பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா போன்ற துரித உணவுகளையும் ஆர்டர் செய்து உணவு உண்டதாகவும் தெரியவந்துள்ளது. எனவே அவரது உயிரிழப்புக்குத் துரித உணவுகளும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடைப்பந்து வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.