கரோனா பாதிப்பை தடுக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதால், சென்னை நகர மக்களுக்கு போதுமான அளவு தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள், தங்கள் கைகளைக் கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது. அதனால், கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் போதுமான தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கைகளை சுத்தப்படுத்த தேவையான ஹேண்ட் வாஷ் போன்ற திரவங்கள் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
பள்ளி- கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான தண்ணீரை விநியோகிக்கச் செய்வதுடன், கைகளைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் திரவங்களையும் வழங்கவேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.