மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என மகா விகாஸ் அகாடி கூட்டணியும், மகா யுதி கூட்டணியும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் இன்று (18-11-24) மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.
இந்த நிலையில், இன்று மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சார்பில் ரோடு ஷோ நடைபெற்றது. இந்த பேரணியில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான பிரியங்கா காந்தி தலைமை தாங்கினார். பெரும் கூட்டத்தை ஈர்த்த இந்த ரோட்ஷோ, நாக்பூர் மேற்கு மற்றும் நாக்பூர் மத்திய தொகுதிகள் வழியாகச் சென்று கொண்டிருந்தது. சாலையோரங்களில் நின்றிருந்த மக்களை, நோக்கி பிரியங்கா காந்தி கை அசைத்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு கட்டிடத்தில் சில பேர் ஒன்று கூடி, பா.ஜ.க கொடிகளை அசைத்து, பா.ஜ.க கட்சியின் முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கொடிகளை அசைத்து காங்கிரஸ் முழக்கங்களை எழுப்பினர். இதனை கண்ட பிரியங்கா காந்தி மைக்கை எடுத்து பா.ஜ.க கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தவர்களிடம், “பா.ஜ.க நண்பர்களே, தேர்தலில் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். ஆனால், மகா விகாஸ் அகாடி கூட்டணி தான் வெற்றிபெறும்” எனப் பேசினார். பிரியங்கா காந்தியின் பேச்சு, அங்கிருந்த காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.