சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையனின் பதவிக் காலத்தை வரும் டிசம்பர் 30- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். புதிய தேர்வுக் குழுவை அடுத்த ஓரிரு மாதங்களில் அமைக்கும் படியும் தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10வது துணைவேந்தராக கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி பொறுப்பேற்ற சுதா சேஷையனின் பதவிக்காலம், கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் 30- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைத்தது தமிழக அரசு.
துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 37 பேர் விண்ணப்பித்து நேர்காணல் முடிந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தி மலர் மற்றும் மூத்த மருத்துவர் ரேவதி ஆகிய மூன்று பேரைத் தேர்வு செய்து ஆளுநரின் முடிவுக்காகத் தேர்வு குழு அனுப்பியது.
ஆனால், சுதா சேஷையனின் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 30- ஆம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.