
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொரப்பட்டது. அதே போன்று 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்குகள் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி (17.04.2025) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் எந்தவொரு உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியம் என அறிவிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
புதிய சட்டப்படி நில வகைப்படுத்துதல் கூடாது. ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்துக்கள் விவகாரங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் கூடாது. நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” எனக் கூறி வக்ஃப் புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தனர். மேலும், “இந்த விவகாரத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும். அதே சமயம், 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் முடித்து வைத்ததாகக் கருதப்படும். விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு எந்த 5 மனுக்கள் என்பதை தேர்வு செய்து கூறுவோம்” எனத் தெரிவித்து இந்த வழக்கை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு சார்பில் கடந்த 25ஆம் தேதி (25.04.2025) உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘வக்ஃப் திருத்தச் சட்டம் மத உரிமைகளை பாதிக்காது. நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருக்கும் வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை ஒழுங்குப்படுத்துவதற்காக மட்டுமே இந்த திருத்தங்கள் உள்ளன. வக்ஃப் சட்டத்திருத்தம் என்பது வக்ஃப் வாரியத்துக்கான சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பானது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வக்ஃப் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நாளை (04.05.2025) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இத்தகைய சூழலில் தான் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “மத்திய அரசின் வாதங்கள் உண்மைக்குப் புறம்பானது எனவே மத்திய அரசின் வாதங்களை நிராகரித்து வக்ஃப் சட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.