நிர்மலாதேவி விவகாரத்தில் செய்தி வெளியிட்டதற்காக, கடந்த ஆண்டு அக்.09 அன்று நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதுசெய்யப்பட்டபோது அவரை விடுவிக்கக் கோரி வைகோ தலைமையில் ஏராளமானோர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் வைகோமீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 190, 353, 290 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார் புலன் விசாரணை செய்து வைகோ மீது எழும்பூர் 14-வது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், வைகோ காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து காவலர்களின் பணியைச் செய்ய விடாமல் தடுத்தது, வைகோவை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது என, இந்திய தண்டனைச் சட்டம் 190, 353,290 ஆகிய பிரிவுகளில் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்தக் குற்றப்பத்திரிகையை மாஜிஸ்ட்ரேட் ரோசலின் துரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வைகோ நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ.