Skip to main content

வாக் அவுட் கவர்னர் ; அமித்ஷா, மோடிக்கு டேக்

Published on 06/01/2025 | Edited on 06/01/2025
Walk Out Governor; Tag Amit Shah, Modi

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் 'அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது' என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த விளக்கம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.

Walk Out Governor; Tag Amit Shah, Modi

பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். கடந்த மூன்று முறையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையை முழுமையாக ஆற்றவில்லை. 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் திருத்தி வாசித்திருந்தார். கலைஞர், பெரியார், திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டு வாசித்து இருந்தார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதன் பின்னர் சபாநாயகர் முழுமையாக உரையை படித்து அது சட்டமன்ற அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டு மொத்தமே நான்கு நிமிடங்களில் உரையை ஆளுநர் முடித்து விட்டார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையை ஆளுநர் முற்றிலுமாக புறக்கணித்து வெளியேறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்