இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜி. இவர் கடந்த 2020 ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், அவரது உடல் லோதி சாலையில் உள்ள மயானத்திற்கு, முப்படைகளின் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவகம் அமைப்பதற்காக டெல்லி ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி என்ற வளாகத்தில் இடத்தை ஒதுக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிதா முகர்ஜி நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பாவுக்கு (பிரணாப் முகர்ஜி) ஒரு நினைவிடத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு எனது இதயத்திலிருந்து நன்றியைத் தெரிவிக்கப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினேன்.
‘அரசு மரியாதை கேட்கக்கூடாது, வழங்க வேண்டும்’ என்று அப்பா கூறுவார். அப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் பிரதமர் மோடி இதைச் செய்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாக இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் மிரதி எனும் சிறிய கிராமத்தில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11 இல் பிறந்த பிரணாப் முகர்ஜிக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், ஷர்மிதா என்ற மகளும் உள்ளனர். 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.