நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணன் விஜயபிரபாகரனுக்காக தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், “இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரம். என்னுடைய அண்ணனுக்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா கோவிலில் இருக்கும்போது, பலரும் கூறினார்கள்.
ஒரு முறையாவது அப்பாவை வெற்றிபெற வைத்திருக்கலாம் என்று வருத்தப்பட்டார்கள். என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என்னுடைய அண்ணனை வெற்றி பெறவைத்தாலும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும். இந்த மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளதோ, அதை என்னுடைய அண்ணன் இந்தத் தொகுதியில் இருந்து, மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தீர்த்து வைப்பார். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, மகனாக விஜய பிரபாகரன் நிற்கிறார். அவருக்காக நீங்கள் முரசு சின்னத்திலே வாக்களிக்க வேண்டும்” என்று ஆதரவு திரட்டினார்.