‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியதாகவும் கடந்த வருடம் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுதெடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன், தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன், சோமசுந்தரம், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், செந்தில்வாசன், சுரேந்தர் நடராஜன் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரேந்தரின் மனைவி கீர்த்திகா மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தங்கள் மீது ஒரே வழக்கு மட்டும் உள்ள நிலையில், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை என்பது சட்டவிரோதமானது என்றும், மூட நம்பிகையை ஒழிக்கத்தான் தாங்கள் வீடியோ வெளியிட்டதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல் காவல்துறை தரப்பில், ஒரு வழக்கிற்காக குண்டர்சட்டத்தில் அடைக்கக் கூடாது என்ற எவ்வித விதியும் இல்லை. வெளியிட்ட வீடியோ இந்து மக்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே இது கடும் குற்றமாகக் கருதப்படும் என்றும் வாதம் முன்வக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டதில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததில் கால தாமதம் ஏற்பட்டிருந்ததாகவும், ஒரு வழக்கிற்காக குண்டர் சட்டம் கூடாது என பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டி உள்துறை அமைச்சகத்தில் கொடுக்கப்பட்ட மனு முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.