Skip to main content

வங்கி பணத்துடன் தலைமறைவான ஊழியர்; வெளியான பரபரப்பு ஆடியோ

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

villupuram chinthamani village bank cashier mukesh call recording 

 

விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட  வங்கி ஒன்று செயல்படுகிறது இந்த வங்கியில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வியாபாரிகள் வரவு செலவுக்கணக்கு வைத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வங்கி கடன் உதவியும் செய்து வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வரும் பிரியதர்ஷினி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேராக சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அந்த புகாரில் வளவனூரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் வங்கியில் காசாளராக வேலை செய்து வருவதாகவும் அவர் நேற்று காலை 10 மணி அளவில் வங்கிக்கு பணி செய்வதற்காக வந்தவர் சுமார் அரை மணி நேரம் கழித்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொண்டு திரும்பி வருவதாக மேலாளரிடம் அனுமதி கேட்டு சென்றுள்ளார்.  நீண்ட நேரம் ஆகியும் முகேஷ் வங்கிக்கு திரும்பி வரவில்லை சந்தேகம் அடைந்த மேலாளர் பிரியதர்ஷினி மருத்துவமனைக்குச் சென்று கேசியர் முகேஷை தேடி உள்ளார். அப்போது அவர் அங்கு இல்லை.

 

இதையடுத்து வங்கிப் பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக மற்றொருவரை கேசியரை நியமித்து பணியை பார்க்கச் சொல்லியுள்ளார். அப்போது கணினியில் வங்கி பணம் இருப்பு தொகை 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்  இருந்துள்ளது. அந்த ரொக்க பணம் முழுவதும் காணவில்லை என்பது தெரியவந்தது உடனடியாக காசியர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை கேசியர் முகேஷ் எடுத்துக் கொண்டு சென்றது தெரிய வந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய்யான காரணத்தை கூறி விட்டு வங்கிப் பணத்தை அள்ளிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் முகேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கேசியரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து வங்கி பணத்தை பெற்று செய்து தருமாறு மேலாளர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

 

இதையடுத்து மேலாளரின் புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த வங்கிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் பணத்துடன் தலைமறைவான கேஷியர் முகேஷை கண்டுபிடிக்க விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் முகேஷ் செல்போனை போலீசார் டிரேஸ் செய்தனர். அதில் அவர் செல்போன் சென்னை பகுதியில் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. இதையடுத்து அவர் ஒரு செல்போனில் இருந்து தனது சகோதரிக்கு ஆடியோவில் பேசிய அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

 

அந்த ஆடியோவில் பேசிய முகேஷ் தனது கணக்கில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை தனது சகோதரிக்கு செல்போன் மூலம் அனுப்பி உள்ளதாகவும் மேலும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வருமாறு ஒரு கும்பல் தன்னை பல நாட்களாக மிரட்டி வந்தது. இதனால் வேறு வழி இல்லாமல் வங்கியின் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கி சென்று கூட்டேரிப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ்ஸில் தன்னை சிலர் அழைத்துச் செல்வதாகவும் தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், தற்போது என்னை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை என ஆடியோவில் பேசி அனுப்பி உள்ளார் முகேஷ். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முகேஷ் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னை யாரோ கடத்திக் கொண்டு போவதாக நடிக்கிறாரா அல்லது உண்மையிலேயே மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்று இருக்கிறார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்