Skip to main content

தண்ணீர் கேட்ட மர்ம நபர்கள்; விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

villupuram arasur village farmer ranganathan incident

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள ஆசூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50). விவசாயியான இவர் மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடன் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது பம்பு செட்டு கொட்டகையில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். கொட்டகையில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணம் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். இதனால் ரங்கநாதன் கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

 

இதனால் கோபம் அடைந்த மர்ம ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ரங்கநாதன் கழுத்து மற்றும் உடம்பில் சில இடங்களில் குத்தி கிழித்து விட்டு அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர். ரங்கநாதன் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரங்கநாதனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். விவசாயி ஒருவரை கத்தியால் குத்திவிட்டு செல்போன், பணம் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்