Skip to main content

என்.எல்.சிக்காக நில அளவீடு செய்ய வந்த ஆட்சியர்,அதிகாரிகளை கிராம மக்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

jkl


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு நிலக்கரி எடுப்பதற்காகப் பல வருடங்களுக்கு முன்பு கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் நிலங்களைக் கொடுத்துள்ளனர். வீடு மற்றும் நிலங்களை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தியபோது, நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு என்.எல்.சி நிறுவனம் உரிய இழப்பீடும் நிரந்தர வேலையும் தராமல் பல வருடங்களாக ஏமாற்றி வந்த நிலையில் தற்போது முதலாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெய்வேலி கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் ஏராளமான காவலர்களுடன் என்.எல்.சி அதிகாரிகள் மற்றும் நில அளவீடு செய்யும் அதிகாரிகள், அளவீடு செய்வதற்காக வருகை தந்தனர். 

 

அப்போது பொதுமக்கள் தாங்கள் ஏற்கனவே என்.எல்.சி நிறுவனத்திற்குக் கொடுத்த நிலம் மற்றும் வீடுகளுக்குத் தற்போது வரை உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் கிடைக்காதபோது மீண்டும் தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், என்.எல்.சிக்காக, எங்களுடைய பகுதிகளை அளவீடு செய்ய வருவது நியாயம்தானா?  என பல்வேறு கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஒற்றுமையாக  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரை அளவீடு செய்ய விடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அளவீடு செய்ய முடியாமல் மாவட்ட ஆட்சியர் திரும்பி சென்றார். 

 


இதேபோல் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக, கம்மாபுரம் அருகேயுள்ள கரிவெட்டி கிராமத்திலும் என்.எல்.சி அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த வருவதாகத் தகவல் அறிந்தவுடன் பா.ம.க கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ் தலைமையில் ஏராளமான பா.ம.கவினரும், கிராம மக்களும் கூடினர். பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் என்.எல்.சி அறிவித்துள்ள இழப்பீடு போதாது என்றும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்றும், அதுவரை நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது என்றும் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்  சுரங்க விரிவாக்கப் பணி தடுத்து நிறுத்தப்பட்டு என்.எல்.சி அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

என்.எல்.சி நிறுவனத்திற்காகப் பொதுமக்களின் நிலத்தை அளவீடு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரைப் பொதுமக்கள் தடுத்துத்  திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்