Skip to main content

அண்ணா பல்கலை. கொடூரம்; தமிழக அரசுக்கு விஜய் முக்கிய கோரிக்கை!

Published on 25/12/2024 | Edited on 25/12/2024
Vijay main request to the TN govt Anna University issue 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  இத்தகைய சூழலில் அங்குப் பயிலும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகரும், த. வெ.க. தலைவருமான விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்