ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஓண்டிமிட்டா காட்டுப்பகுதியில் உள்ள ஏரியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 மலைவாழ் மக்கள் இறந்துகிடக்கும் தகவல் வெளியாகி அதிர்ந்தது தமிழகம்.
உண்மையில் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளவும், அவர்களது உடலை முறைப்படி தமிழகம் கொண்டு வர மர்மமான முறையில் இறந்துப்போன 5 பேரின் குடும்பத்தாரோடு சேலம் மாவட்ட போலிஸார் கடப்பா அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
ஒண்டிமிட்டா காவல்நிலைய போலிஸார் இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடப்பா ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உடல் ஆய்வு கூறு நடத்தி பாதுகாப்பாக வைத்திருந்தனர். அங்கு இருந்த கடப்பா மாவட்ட போலிஸாரோடு தமிழகத்தில் இருந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அதிகாரிகளிடம் ஆந்திரா போலிஸார், செம்மரம் வெட்ட வந்தவர்களை யாரோ மடக்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது ஏரியில் மூழ்கி இறந்துள்ளார்கள் என்கிற தகவலை கூறியுள்ளனர். அதனை போலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக அதிகாரிகளுடன் வந்துயிருந்த இறந்தவர்களின் உறவினர்களிடம் ஆந்திரா போலிஸார், ஏன் அவர்கள் கடப்பா வந்தார்கள், அவர்களை அழைத்து வந்தது யார், இதற்கு முன்பு இங்கு வந்துள்ளார்களா, உண்மையில் நீங்கள் இறந்தவரின் உறவினர்கள் தானா என்கிற கேள்வியை எழுப்பி பதிலை பெற்றுக்கொண்டு பதிவு செய்துக்கொண்டனர். இறந்தவர்கள் தங்களது உறவினர் தான் என்கிற ஆவணங்களை பெற்றுக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்குமார், வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் இருவரையும் சாட்சியாக வைத்துக்கொண்டு கடப்பா டி.எஸ்.பி உடல்களை ஒப்படைத்துவிட்டு உடல் அவர்களிடம் ஒப்படைத்தற்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டது ஆந்திரா போலிஸ்.
சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த 5 அமரர் ஊர்த்தியில் உடல்கள் ஏற்றப்பட்டு சேலம் நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறார்கள்... அரசு அதிகாரிகளும், இறந்தவர்களின் உறவினர்களும்.