திருச்சி வீடியோ தொழில்நுட்பக் கலைஞர்களை இரவு நேரத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடத்தில் வீடியோ மற்றும் ஃபோட்டோகிரபர் சங்கத்தினர் மனு அளித்தனர். தமிழகத்தில் 2ம் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் ஃபோட்டோ ஔிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் நிக்சன் சகாயராஜ் தலைமையில் நிர்வாகிகள் ராஜாராம், ஜீவானந்தம், கென்னடி ஜூல்ஃபி அகமத் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர். அதில்,
"திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் ஃபோட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் தற்போது 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். எங்களுக்கு முகூர்த்த தினங்களில் நடக்கும் திருமணங்கள் தான் வாழ்வாதாரமாகும். பெரும்பாலான முகூர்த்த தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. மற்ற நாட்களில் ஒரு சில திருமணங்கள் மற்றும் பல்வேறு பொது நிகழ்வுகள் நடைபெறுகிறது. நிகழ்வுகள் பெரும்பாலும் இரவு 10.00 மணிக்கு மேல் முடிந்து பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, வீடியோ தொழில்நுட்பக் கலைஞர்கள் நிகழ்வுகளை முடித்துவிட்டு வரும்போது, எங்களைப் பயணிக்க அனுமதிக்க வேண்டும்" என மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அனுமதி வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.