Published on 05/06/2018 | Edited on 05/06/2018
ஜூன் 12ல் காவிரி நீரை பெற்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை முடக்கும் உள்நோக்கத்தோடு கர்நாடக, கேரள மாநிலங்கள் ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை வழங்க மத்திய நீர்வளத் துறை செயலர் யு.பி. சிங் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது,
அப்போது அங்கு நடந்த கூட்டத்தில் பங்கு கொண்ட தமிழக பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர் கால நீட்டிப்பு குறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை என யு.பி. சிங் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கமளிப்பதோடு, உடன் தமிழக அமைச்சர்கள் குழுவை டெல்லிக்கு அனுப்பி வைத்து ஆணையம் உடன் அமைத்து ஜூன் 12ல் காவிரி நீரை பெற்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
முல்லை பெரியாறு அணை 152 அடி கொள்ளளவை உயர்த்துவதை தடுத்திடும் உள்நோக்கத்தோடு கூடுதலாக புதிய துணைக்குழு அமைத்து பேரிடர், அதிக மழை பொழிவு காலங்களில் ஆய்வு செய்ய வேண்டுமென கேரள அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் பிரதிநிதிகள் மறுப்பு தெரிவிக்காதது ஏன்? புதிய துணைக்குழு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரனானது. ஏற்கனவே இரண்டு குழுக்கல் உக்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு அணை வலுவாக உள்ளது என்றும் 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது புதிய குழு தேவையற்றது மட்டுமின்றி கொள்ளளவை உயர்த்துவதை தடுத்து நிறுத்தும் செயல் ஆகும். இதனைத் திரும்பப் பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.