சேலத்தில், அங்கன்வாடி ஊழியர்களிடம் லஞ்சம் வசூலித்த பெண் அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலராக பாலாம்பிகை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் அங்கன்வாடி பணியாளர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் கிளம்பின.
காய்கறி, அரிசி கொள்முதல் செய்த வகையில் ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் தலா 500 ரூபாயும், அங்கன்வாடி மையத்திற்கு வாடகை செலுத்திய கணக்கில் இருந்து 1000 ரூபாயும் பாலாம்பிகையிடம் கொடுத்து வந்தனர். இதற்காக அவர் போலி கணக்குகளை எழுதுமாறும் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும், கூடுதல் மாமூல் கேட்டு பணியாளர்களை அவர் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை (மார்ச் 13, 2019) இரவு நேரத்தில் சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பாலாம்பிகை அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு பணியாளரையும் அ-ழைத்து லஞ்சம் வசூலித்து வருவதாக, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த மையத்தில் இருந்து கணக்கில் வராத 50400 ரூபாய் இருந்தது. அத்தொகையை கைப்பற்றிய காவல்துறையினர், அதுகுறித்து பாலாம்பிகையிடம் விசாரித்தனர். ஆனால் அவர் பதில் ஏதும் கூறாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மவுனமாகவே இருந்தார்.
அங்கன்வாடி ஊழியர்களான நூர்ஜஹான், சாந்தி ஆகிய இருவரும்தான் பாலாம்பிகைக்கு லஞ்சம் வசூலித்துக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாலம்பிகையுடன் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.