கேரளாவின் நில அளவை துறையின் டைரக்டராகப் பணியிலிருந்தவர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி. கடந்த 2ம் தேதியன்று இரவு திருவனந்தபுரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான கிளப்பில் நடந்த டின்னர் விருந்தில் கலந்து கொண்ட ஸ்ரீராம் வெங்கட்ராமன் மது அருந்தியிருக்கிறார்.
குடித்ததின் விளைவாய் போதை ஏறியிருக்கிறது. தள்ளாட்டத்திலிருந்திருக்கிறார். அதேசமயம் தன்னோடு விருந்தில் கலந்து கொண்ட தனது ஃபேஸ்புக் காதலி வாபா பெரோஸ் உடன் நடு இரவில் காரில் தன் வீடு திரும்பியிருக்கிறார். வாபா பெரோஸ் ஏற்கனவே திருமணமாவர். கணவர் கல்ஃப்பிலிருந்தாலும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுடன் நட்பாகவும் நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். போதையில் ஸ்ரீராம் வெங்கட்ராமனே காரை ஒட்டியிருக்கிறார். திருவனந்தபுரம் - பாளையம் மியூசியம் சாலையில் சென்றிருக்கிறது.
குறிப்பாக இந்தச் சாலை ஜனரஞ்சகமானது என்பதால் அதில் 40 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. தறிகெட்டுப் பறந்திருக்கிறது ஐ.ஏ.எஸ்.சின் கார். அப்போது தனது இரவு நேரப் பணியினை முடித்து விட்டு டூவீலரில் வீடு திரும்பிய சிராஜ் என்கிற மலையாள தினசரிப் பத்திரிகையின் முதன்மை நிருபர் முகம்மது பஷீரின் பைக்கில் மோதியிருக்கிறது. அந்த வேகத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட நிருபர் முகம்மது பஷீரின் உடலில் ஏற்பட்ட பலத்தகாயம் காரணமாக சாலையிலேயே துடிதுடித்து இறந்திருக்கிறார்.
ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் விபத்தை ஏற்படுத்தியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று தெரியவர காயம் படாத அவரை அருகிலுள்ள கிம்ஸ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்தனா். தகவலறிந்த முதல்வர் பினராய் விஜயன் நிருபரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார் .
நிருபரின் மறைவால் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் நிர்க்கதியானார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரியால் நிருபர் ஒருவர் பலியானது கேரளா முழுக்க எதிரொலித்தது. ஆதரவற்று தவிக்கும் இந்தக் குடும்பத்திற்கு வெளிநாடுகள் பலவற்றில் மல்ட்டி காப்ளக்ஸ்களை வைத்திருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலி பத்து லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அரசுத்தரப்பும் உதவிக்கரம் நீட்ட தயாராகிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே குடித்து வி்ட்டு வாகனத்தை ஒட்டியதுமில்லாமல் பயங்கரமான விபத்தை ஏற்படுத்தி உயிர் பலியாகக் காரணமான ஐ.ஏ.எஸ். அதிகாரியை போலீசார் உடனடியாக மருத்துவ சோதனைக்குப்படுத்தாமல், அதிகாரிகள் 10 மணி நேரம் கழித்தே மருத்துவ சோதனைக்கு அனுப்பியுள்ளதை பலியான நிருபரின் குடும்பத்தார்கள் புகார் கூறியுள்ளனார். வாகனச்சட்டப்படி அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றகாவலில் வைக்கப்பட்டுள்ளார். உடன் வந்த அவரின் பெண் நண்பர் வாபா பெரோஸ் நீதிபதியிடம் ரகசிய வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.