தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் புழல் சிறையில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகெங்கிலும் வாழும் சமூக உணர்வு கொண்டவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வேல்முருகனைக் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் வேல்முருகனைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அதேசமயம், சமீபத்தில் இறந்த பா.ம.க.வைச் சேர்ந்த காடு வெட்டிகுருவின் இறுதிச்சடங்கிற்கு செல்லவும் வேல்முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் தண்ணீர் கூட அருந்தாமல் வேல்முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.