விழுப்புரத்தைச் சேர்ந்த திமுக வார்டு செயலாளராக உள்ளவர் பாலாஜி. இவர் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பெயிண்டிங் மற்றும் பழுது நீக்கும் ஒர்க்ஷாப் வைத்துள்ளார்.
இவர் நேற்று இரவு ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தின் பின்புறம் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் நாகாய் நிறுவனத்தின் வாகனம் ரோந்து பணியில் செல்லும் போது பாலாஜியின் பைக் சாலையோரம் கிடந்ததை கண்டு விபத்து நடந்துள்ளதாக கருதி அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அங்கே பாலாஜி கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை கண்ட நாகாய் ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பாலாஜிக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டது முன்விரோதம் காரணமா அல்லது குடும்ப பிரச்சினையா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
பாலாஜி விழுப்புரம் நகர திமுகவின் முக்கிய பிரமுகரான பஞ்சநாதன் என்பவரின் உறவினராம். இதனால் இன்று காலை முதல் விழுப்புரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.