
விழுப்புரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார்.
அரசு விழாவில் 15 நிமிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஒருமுறை கூட முதல்வரின் பெயரை குறிப்பிடவில்லை. இதன் மூலம் முதல்வர் எடப்பாடிக்கும் அமைச்சர் சண்முகத்திற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்று கூட்டத்தில் வந்தவர்கள் பேசிக்கொண்டனர். மேலும் அரசு விழாவை அதிமுகவின் கட்சி நிகழ்ச்சியாக மாற்றும் வகையில் அதிமுகவினர் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வரவேற்று கொடி மற்றும் வரவேற்பு பதாகைகளையும் வைத்திருந்தனர்.
திண்டிவனம் சீத்தாபதி சொக்கலிங்கம், மயிலம் மருத்துவர் மாசிலாமணி, செஞ்சி மஸ்தான் ஆகிய 3 திமுக எம்எல்ஏக்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. இருசக்கர வாகனம் வாங்க வந்த பெண்கள் 300 பேர் அமைச்சரின் வருகைக்காக சுமார் 3 மணி நேரமாக உணவருந்தாமல் காத்திருக்க வைத்ததால் பலர் சோர்வடைந்தனர்.