தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 20ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கரோனாவின் தாக்கம் குறையாததால், சென்ற 10ந் தேதி முதல் வருகிற 24ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்துவருகிறது.
எனினும் முழு ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொது மக்கள் தொடர்ந்து வெளியே சுற்றி வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் மக்கள் பலர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தங்கள் இஷ்டம் போல் சுற்றி வருகிறார்கள். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி காரணம் கேட்டால், ஏதாவது ஒன்றைச் சொல்லிச் சென்று விடுகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலை நீடித்ததையடுத்து, முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
குறிப்பாக, ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 9 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 800க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, 13 நிலையான சோதனைச் சாவடிகளும் 42 கூடுதல் சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் நிறுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்கள் ஊரடங்கின் போது, தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்கிறார்கள். அந்தவகையில், 17ந் தேதி ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதியில் போலீஸார் தடுப்புகளை அமைத்துச் சோதனையிட்டனர்.
இதில், தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 802 வழக்குகளும், முகக் கவசம் உட்பட அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் வந்ததாக 226 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும் 87 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ தெரிவித்தார்.