ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலை போலீஸ் முதல் பொதுமக்கள் வரை சந்தனக்காடு வீரப்பன் கோயில் என்றுதான் அழைத்து வந்தார்கள். காரணம் இந்த கோயிலுக்கு வீரப்பன் அடிக்கடி வந்து சென்றார் என்பதுதான்.
இந்த கோயில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
நேற்று தை அமாவாசை தினம் என்பதால் காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது. அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் முன்புள்ள குண்டத்திற்கு உப்பு மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் அதிகரித்ததால் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.