
மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் சென்னையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கையெழுத்து பெறவும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்கு வந்த போலீசார் அனுமதி வாங்காமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர். போலீசார் தமிழிசை சௌந்தரராஜனிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'மக்களிடம் தங்களுடைய கோரிக்கையை எடுத்து வைத்து மும்மொழிக் கொள்கை தேவை என்பதை குறித்து கையெழுத்து வாங்க இருக்கிறோம். பொதுமக்கள் பார்வையில் நாங்கள் செய்வது கரெக்ட் சார். பாமர மக்களுக்கு மூன்று மொழி சொல்லிக் கொடுங்கள் என மிகவும் பொறுமையாக ரொம்ப அமைதியா கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் செய்வதை செய்து கொள்ளுங்கள். பொது மக்களை பார்ப்பது தவறா?'' என தமிழிசை கேள்வி எழுப்பினார். போலீசார் தொடர்ந்து தடுத்ததால் பாஜகவினர், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.