பிரபல ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜனின் ‘தாளடி’ நாவல் பல்வேறு விருதுகளைப் பெற்றுவரும் நிலையில், வடசென்னைத் தமிழ்ச்சங்கம் நாவலாசிரியர் சீனிவாசன் நடராஜனுக்கு ‘வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருதை’ வழங்கிச் சிறப்பித்தது.
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியை, கவிஞர் அமிர்தம் சூர்யா, கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார். சீனிவாசன் நடராஜனுக்குக் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியம் வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருதினை வழங்க, நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் முனைவர் தமிழ் மணவாளன், நூல் குறித்துச் சிறப்பாக ஆய்வுரை வழங்கினார்.
அப்போது அவர், "தாளடி பயிரிடும் காலத்தில் இந்த நூலாசிரியருக்கு வீரமாமுனிவர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தாளடி என்ற சொல் மதிப்புமிக்க சொல். ஏனெனில் தாளடி நெல்லை தைத்திங்களில் அறுத்து, அந்தப் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் தமிழர் மரபு. எனவே அதை நினைவுறுத்தும் வகையில் இந்த தாளடிப் புதினம் அமைந்திருக்கிறது. நாவலை எழுதிய சீனிவாசன் நடராஜன், கீழத்தஞ்சை வரலாற்றின் ஒரு காலகட்டத்தை இதில் காட்சிகளாகப் பதிவுசெய்கிறார். அது மனதில் வீழ்படிவாக ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட கதையைப் படியவைக்கிறது.
67 ஆம் ஆண்டு என்று இந்த நாவல் தொடங்குகிற காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் மாற்றங்களை உருவாக்கிய காலகட்டம் இது. கீழவெண்மணியின் கொடூரத்தையும் இந்த நாவல் உணர்த்தி, நம் நெஞ்சைப் பதற வைக்கிறது. சீட்டுக்கட்டைக் கலைத்துப்போட்டு அடுக்குவது போல், காட்சிகளைக் கலைத்துப்போட்டு ஒரு கதையை நிகழ்த்தியிருக்கிறார் நூலாசிரியர். இதுதான் தாளடி நாவலின் வெற்றி. இவருக்கு வீரமாமுனிவர் விருது வழங்குவது மிகவும் பொருத்தமானது. சீனிவாசன் நடராஜன், இன்னும் அரியபல படைப்புகளைப் படைக்க வேண்டும்” என்று பாராட்டி வாழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய சீனிவாசன் நடராஜன் “ஒரு கால கட்டத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்த அரசியல் பின்னணி கொண்ட சம்பவங்களை, பதிவு செய்ய விரும்பினேன். அதுதான் தாளடி. நான் பார்த்த மனிதர்களையும் நான் உணர்ந்த அனுபவங்களையும் இதில் உலவ விட்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. புதிய வேகம் பிறந்திருக்கிறது. இன்னும் பொறுப்புணர்வோடு எழுதவேண்டும் என்ற உணர்வை எனக்குள் விதைத்திருக்கிறது. என் அடுத்த படைப்புகளின் குரல் வேறுமாதிரியாக இருக்கும்” என்றார் அழுத்தமாக.
இந்த நிகழ்ச்சியில், கவிஞர் நிமோஷினி விஜயகுமாரன், கவிஞர் சிங்கார சுகுமாறன், கவிஞர் சொர்ண பாரதி, இயற்கை ஆர்வலர் வானவன், கவிஞர் துரை. நந்தகுமார், ‘தேநீர் பதிப்பகம்’ கவிஞர் நா. கோகிலன், கவிஞர் வேல்கண்ணன், எழுத்தாளர் லதா, டிசைனர் சந்துரு, சுபா, கவிஞர் சூர்யா, நான் எஃப்.எம். நாகா, திரைக்கலைஞர் ரேகா, கவிஞர் தேவசீமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை வடசென்னை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் இளங்கோவன், கருணாநிதி, வழக்கறிஞர் கு.பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.