அரசின் கருணை அடிப்பிடையிலான நிவாரணத் தொகையைப் பெறவுள்ள விதவைப் பெண்ணிடம், ஏட்டையா ஒருவர் லஞ்சமாக ரூ.1000 பெற்றது ஆடியோவாகி சமூக வலைத்தங்களில் பரவ மாவட்ட எஸ்.பி.யால் உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் அந்த ஏட்டையா.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 30ம் தேதி முன் விரோதத்தின் காரணமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். இவருக்கு அரியநாச்சி எனும் மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். எவ்வித ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியான அரியநாச்சி கருணை அடிப்படையிலான நிவாரணத்தொகை ரூ.25 ஆயிரம் கேட்டு அரசிடம் விண்ணப்பிக்க, வழக்கு விபரமும், தடையில்லா சான்றிதழும் கேட்டு அவ்விண்ணப்பம் கடலாடி காவல் நிலையத்திற்கு வந்திருக்கின்றது.
அரசிடமிருந்து " தடையில்லா சான்றிதழ்" கேட்டிருக்கின்றார்கள் அதனை நான் தான் தயார் செய்ய வேண்டும். அதற்காக ரூ.1000 வேண்டுமென." விதவைப் பெண்ணான அரியநாச்சியிடம் லஞ்சம் கேட்டிருக்கின்றார் கடலாடி காவல் நிலைய ஏட்டையாவான 1098 முருகானந்தம். அந்தப்பெண்ணும் வட்டிக்கு வாங்கி ஏட்டையாவிடம் கொடுத்திருக்கின்றார். ஆனால் நிவாரணத்தொகை வந்தபாடில்லை.
இந்நிலையில், " ஏட்டையா ரூ.1000 பணத்தை வாங்கிக் கொண்டு உன்னை ஏமாற்றி விட்டார்." என உள்ளூர்க்காரர்கள் அரியநாச்சியிடம் கூற, அவரும் " ஐயா.!! நிவாரணத்தொகை வாங்கித் தார்றேன்னு சொல்லி ரூ.ஆயிரம் வாங்கிட்டு போனீங்க.. இப்ப வரைக்கும் பணம் வரலை. அது நான் உப்பு சுமந்த காசு.. அது போக ஊருக்குள் கடன் வாங்கி கொடுத்த காசு.!" என ஏட்டையா முருகானந்தத்திற்கு போனைப் போட்டு கேட்க, " இந்தப் பாரு.! யாரு என்ன சொன்னாலும் சரி.!! உனக்குப் பணம் வந்துடும்." என்கிறார். இந்த ஆடியோ மாவட்டத்திலுள்ள அனைவருக்கும் பரவி மாவட்ட எஸ்.பி.யின் கவனத்திற்கு செல்ல உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஏட்டையா முருகானந்தம்.
இது காவல்துறை மத்தியில் மிகுந்த பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.