ஜவ்வாதுமலை என்பது பரந்து விரிந்த பெரும் மலைப்பகுதி. திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களுக்குள்ளும் இந்த மலைப்பகுதி வருகிறது. ஒருக்காலத்தில் சந்தனமரங்களுக்கு பெயர்போனது ஜவ்வாதுமலை. ஆசியாவிலேயே பெரிய சந்தன மரக்கிடங்கு வேலூர் மாவட்டத்தில் இருந்தது.
அப்படிப்பட்ட மலையில் சந்தன மரக்கொள்ளையர்களால் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட, இப்போது சந்தன வாசனையே இல்லாத மலையாக ஜவ்வாதுமலையுள்ளது. சந்தனமர வாசனைதான் கிடையாதே தவிர கஞ்சா வாசனை அதிகமாக வீசுகிறது என்கிற குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
![police arrest](http://image.nakkheeran.in/cdn/farfuture/feDmhXSgq0OuUq1jnAhlxVEqi8P2y2gzg2Vy9GJC0OE/1574612207/sites/default/files/inline-images/ase_0.jpg)
திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் உள்ளது புதூர்நாடு என்கிற மலைக்கிராமம். இந்த புதூர்நாடு ஊராட்சியின் கீழ் 14 கிராமங்களுக்கு மேல் உள்ளது. அதில் ஒன்று புதுப்பாறையம் என்கிற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 35 வயதான காளி என்பவர், தனது விவசாய நிலத்தில், அவரை செடி பயிர் வைத்துள்ளார். இவைகளுக்கு மத்தியில் அரை ஏக்கர் அளவில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். அந்த கஞ்சா செடிகளை பறித்து விற்பனைக்கு கேரளா, கர்நாடகா என அனுப்பியுள்ளார்.
இதனை கண்டறிந்த புதூர்நாடு பகுதி வனக்காவலர்கள், இதுப்பற்றி திருப்பத்தூர் வனச்சரகர் சோழராஜனிடம் தகவலை கூறியுள்ளார். அந்த தகவலை தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது, கஞ்சா செடிகள் வளர்ந்துயிருப்பது தெரியவந்து, இது தொடர்பாக காளியை நவம்பர் 23ந்தேதி விசாரணைக்காக திருப்பத்தூர் அழைத்து சென்று அங்குள்ள வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜவ்வாதுலையில் கஞ்சா செடி பயிரிட்டதாக இந்த வாரத்தில் இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக வனத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.