திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிக் டாக்கில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசி வீடியோ வெளியிட்ட நண்பர்கள் இறுதியில் உயிரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியை அடுத்த தாளவேடு கிராமத்தில் வெங்கட்ராமன் என்ற இளைஞர் அவரது நண்பர் விஜயன் என்பவருடன் சேர்ந்து வேறு சமூகத்தை குறித்து அவதூறாக டிக் டாக்கில் வீடியோ எடுத்து இருவரும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ என்னமாதிரியான விளைவுகளை உருவாக்கும் என சிறிதும் யோசிக்காமல் அந்த வீடியோ வெளியாகியது. சமூகவலைதளத்தில் பரவிய அந்த வீடியோ குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த இது குறித்து அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த சமூகத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருத்தணி போலீசார் வீடியோ வெளியிட்ட வெங்கட்ராமன், விஜயன் என இருவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் அந்த இருவரும் போலீசாரிடம் தப்பித்து மறைந்திருந்த நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் இருவரும் கூட்டாக மது அருந்தி கொண்டிருந்த பொழுது வீடியோ பதிவிட்டது தொடர்பாக கூட்டாளிகளுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்று. இறுதியில் ஆத்திரத்தில் வெங்கட்ராமன் துண்டால் விஜயனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் திருத்தணி போலீசாரிடம் சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் வெங்கட்ராமன்.
அதன்பின் கடந்த மாதம் 17 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்த வெங்கட்ராமன் திருத்தணி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டுவந்தார். டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டது, அது தொடர்பாக நண்பரை கொலை செய்தது என இந்த வழக்கில் கிடைக்கப்போகும் தண்டனைகள் தொடர்பாக பயத்தில் இருந்த வெங்கட்ராமன் கடந்த செவ்வாய் கிழமை காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பிறகு கார்த்திகேயபுரத்தில் உள்ள ஒரு ஏரியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி ஒரு டிக் டாக் வீடியோ பதிவு இரு உயிரை பறிக்கும் நிலைக்கு போயிருக்கும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் செயலி தனி திறமைகளை வெளிக்காட்டும் ஊடகமாக இருந்தாலும் பல நேரங்களில் இது பல பிரச்சைனைகளையும், பூசல்களையும் உருவாக்கும் இடமாகவே இருக்கிறது. அண்மையில் பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக எழுந்த சர்ச்சைகள் இறுதியில் கைது நடவடிக்கை, 144 தடை என பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் டிக் டாக்கில் மூழ்கி குழந்தையை கவனிக்காததால் கணவன் திட்டியதற்காக டிக் டாக்கிலேயே பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பள்ளி ஆசிரியர் விடிய விடிய சுமுல் ஆப்பில் பாட்டு பாடிவிட்டு பள்ளிக்கு சரியாக வராமல் போனது என சமூக ஊடகத்தினை தவறாகவும், அதிகமாகவும் பயன்பத்துவதால் நடக்கப்போவது இன்னும் எத்தனை எத்தனையோ...