சேலத்தில் பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த வேலூர் கூலிப்படைத் தலைவன் வசூர் ராஜா, ஆத்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப். 22) சரணடைந்தார்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (35). இவர் மீது இரண்டு கொலை உட்பட 20 வழக்குகள் விசாரணையில் உள்ளன. பிரபல ரவுடியான இவரை கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 22- ஆம் தேதி இரவு, கிச்சிப்பாளையம் காவல்நிலையம் அருகே வைத்து 30- க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.
காவல்துறை விசாரணையில், செல்லத்துரையின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ரவுடிகள் மோசஸ், டெனிபா, சூரி ஆகியோரும், செல்லத்துரையின் கூட்டாளிகளாக இருந்த ஜான், அ.தி.மு.க. வார்டு வட்டச் செயலாளர் பழனிசாமி ஆகியோரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சூரி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், ஜான் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட இதுவரை மொத்தம் 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலையின் பின்னணியில் வேலூரைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத் தலைவன் வசூர் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், அவர் திடீரென்று தலைமறைவானார். வசூர் ராஜா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் உள்ளன.
தனிப்படை காவல்துறையினர் தன்னை நெருங்கியதை அறிந்த வசூர் ராஜா, திடீரென்று சேலம் மாவட்டம் ஆத்தூர் நீதிமன்றத்தில் திங்களன்று (பிப். 22) சரணடைந்தார். இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.