கஜா புயல் தாக்கத்தின்போது பதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவராத பிரதமர் மோடி தமிழகத்தின் எந்த பகுதிக்கு வந்தாலும் ''கோ பேக் மோடி'' என்ற வாசகத்தோடு மதிமுக கறுப்புக்கொடி காட்டும் என அறிவித்திருந்தது. அதன்படி ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை இந்த பகுதிகளுக்கு வந்த பிரதமர் மோடியின் வருகையின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக மதியம் 1.30 மணிக்கு வருகிறார் மோடி. இதையொட்டி நெல்லை குமரி எல்லையான காவல்கிணறு சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களோடு சேர்ந்து மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டினார்கள். அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த 5 பேர் வைகோவை பார்த்து கல் வீசினார்கள். இதில் அந்த கற்கள் யார் மீதும் படாமல் சென்றது. கல் வீசிய 5 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கறுப்புக்கொடி காட்டிய வைகோ உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.