கரோனா பாதிப்பு காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை பூங்கா, கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
படிப்படியாக, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வைகை அணை பூங்கா மட்டும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், வைகை அணைக்கு வந்து ஏமாற்றத்துடன், திரும்பிச் சென்றனர். மேலும், தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தளமான வைகை அணை பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில்தான், பத்து மாதங்களுக்குப் பின்னர், வைகை அணை பூங்கா, சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. திடீரென, அறிவிக்கப்பட்டதால் வைகை அணைக்கு மிகவும் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர். இதனால், வைகை அணை பூங்கா பகுதிகள், வெறிச் சோடி காணப்பட்டது. மேலும், வைகை அணைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை மற்றும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வைகை அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால், அடுத்துவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.