இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையை அடுத்து நடிகர் வடிவேலு நடிக்க ரெட் கார்டு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், ''வைகைப்புயல் வைகைப்புயல்'னு சொல்கிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் ஒரு பெரிய சூறாவளியே அடிச்சுருச்சி. அடிக்கடி கதை ஒன்றை சொல்வேன். ஒரு பத்திரிகையில் கூட சொல்லி இருக்கிறேன். ஒரு நோயாளி ஒரு டாக்டரிடம் சென்று, ஐயா மனசே சரியில்லை... நிம்மதி இல்லை... தூக்கமே வரவில்லை... எனக்கு ஏதாவது ஒரு மருத்துவம் பண்ணுங்க என கேட்டுள்ளார். அதற்கு அந்த டாக்டர் சொல்லிருக்காரு, இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்க திங்கட்கிழமை வாங்க நான் உங்களுக்கு ஒரு ட்ரீட்மென்ட் எடுக்கிறேன் என சொல்லிருக்கார். அதற்கு நோயாளி, எனக்கு உண்மையிலேயே தூக்கமே வர மாட்டேங்குது. நிம்மதி இல்லை என்னை நீங்கதான் காப்பாத்தணும் ஏதாவது ஒரு ட்ரீட்மென்ட் இப்பவே எடுங்க என்றார்.
நீங்க திங்கட்கிழமை வாங்கனு திரும்பவும் அந்த டாக்டர் சொல்ல, இல்ல சார் என்னால முடியாது. கண்டிப்பா நீங்க எனக்கு இன்னைக்கு தான் ட்ரீட்மென்ட் எடுக்கனும்'னு அந்த நோயாளி சொல்லிருக்காரு. அப்போ அதுக்கு அந்த டாக்டர் சொல்லிருக்காரு, நீங்க ஒன்னு செய்யுங்க, பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அங்க ஒரு பபூன் பிரமாதமா காமெடி பண்றாரு. அங்க போறதுக்காக நானும் என் மனைவியும் ரெண்டு டிக்கெட் எடுத்து வைச்சுருக்கோம். என் மனைவி டிக்கெட்டை உங்களுக்கு தருகிறேன். நீங்களும் நானும் போய் அந்த சர்க்கஸை பார்ப்போம். அதில் அந்த பபூன் செய்ற காமெடியை பாத்துட்டீங்கனா உங்க மனசுல இருக்குற பாரமெல்லாமல் இறங்கிடும். அதுக்கப்புறம் நல்லா இருக்கு என கூறியிருக்கிறார். அதற்கு நோயாளி சொல்லியிருக்கிறார், அந்த பபூனே நான்தான்னு. கிட்டத்தட்ட அந்த அளவுக்குத்தான் நான் வாழ்ந்தேன். எனக்கு மட்டுமல்ல இதற்கிடையில் கடந்த நாலு வருஷமா நடிக்காம இருந்தது மட்டுமில்லாம உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் கரோனா என்னும் கொடுமையான நோய் வந்து, தம்பிய அண்ணன் பாக்க முடியல, தாய மகன் பாக்க முடியல, மனைவியை கணவன் பாக்க முடியல. வெளிநாட்டில் இருந்தால் தான் விசா கிடைக்காது. ஆனா இப்போ அடுத்த தெருவுல, அடுத்த வீட்டில் ஒருவர் இறந்தால் கூட, ஏன் கணவனை இழந்தால் கூட மனைவி மாடியில் இருக்கணும். சீக்கிரம் எடுத்துட்டு போங்க என் பிள்ளைகளுக்கு வந்திட போகுது அப்படினு பயந்து நடுங்கும் காலம். இதனால் இந்த பிரச்சனையில் என்னுடைய பிரச்சனை சாதாரண பிரச்சினை ஆகிவிட்டது'' என்றார்.