தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு, மூன்று நாட்களாக சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நினைத்து மிகவும் கவலையில் உள்ளார். அவர்தான் என்னை சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களையெல்லாம் பார்வையிட சொன்னார். அதன்படி, நான் இங்கு வந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை சந்தித்து நிலைமையை அறிந்தேன். பிரதமர் மோடி, 24 மணி நேரமும் இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட இடங்களை பற்றி பிரதமரிடம் தெரிவிக்க இருக்கிறேன்” என்று கூறினார்.