மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டாலும், அறுவடை காலத்தில் அதிக மழை பெய்தாலும் உழைத்த விவசாயி போதிய வருவாயின்றி கண்ணீர் விட வேண்டிய அவல நிலைதான் அவர்களுக்கு மிஞ்சுகிறது.
இதற்கு நேர்மாறாக இப்போது நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என சில விவசாயிகள் கூறினால் எப்படி இருக்கும். அதைவிட அருமையான தருணம் கிடைக்கவே கிடைக்காது. ஆம் அப்படியொரு நிகழ்வை நாம் நேரில் பார்த்தோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தான் அதனைக் கண்டோம்.
சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் சென்றமாதம் சிலநாட்கள் பருவ மழை பெய்தது. அதைப் பயன்படுத்திய விவசாயிகள் அவர்களின் நிலங்களில் நிலக்கடலை, பயிர் சாகுபடியைத் தொடங்கினார்கள். பொதுவாக நிலக்கடலை நான்கு மாதப் பயிர் என்பதோடு நிலக்கடலை சாகுபடியை பொறுத்தமட்டில் இருபது நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்தால் அந்தப் பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கும். திடீரென மழை குறைந்து விட்டால் சாகுபடி பாதித்து அறுவடையில் கால தாமதம் ஏற்படுவதோடு விளைச்சலும் குறைந்து விடும்.
சென்ற ஒரு மாதத்துக்கு அப்பகுதிகளில் பெரிய அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் சற்று கவலையடைந்தனர். ஆனால் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவகிறது. இப்போது நிலக்கடலை செடிகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. அறுவடைக்கும் தயாராகி விட்டது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலக்கடலை சாகுபடியால் தங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் நம்மிடம் நம்பிக்கை தெரிவித்தார்கள். உழைத்தவனின் வாழ்க்கை செழிப்படைவதே அரிதானது தான்...!