Skip to main content

நீட் விலக்கு மசோதா- கட்சிகளின் கருத்து!

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

Neet Exemption Bill- Parties' Opinion!

 

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

 

அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்து உரையாற்றினார். 

 

பின்னர், நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். 

Neet Exemption Bill- Parties' Opinion!

அப்போது பேசிய பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "ஏ.கே.ராஜனின் குழு அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் கருத்துக் கூறவில்லை" எனத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

 

இதனிடையே, வெளியே போறதுக்கு இவ்ளோ பில்டப் வேண்டாம்; போக நினைத்தால் போய்விடுங்கள் என்று கூறினார் சபாநாயகர் அப்பாவு. 

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது, "நீட் தேர்வு பயிற்சிக்காக மாணவர்கள் ரூபாய் 5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். விண்ணப்பித்த பிறகும் நீட் தேர்வு மீதான அச்சத்தால், அதனை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுவதில்லை. நீட் விலக்கு மசோதாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார ஆதரிக்கிறது" என்றார். 

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறியதாவது, " பட்டியலின மக்கள், ஏழை, எளிய மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் ஆளுநரின் கடிதம் உள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் 7.5% இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை தேவை" என்றார். 

Neet Exemption Bill- Parties' Opinion!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது, "நீட் தேர்வு என்ற பெயரில் ஏழை, எளிய மற்றும் பட்டியலின் மாணவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை உள்ளது. ஆளுநரின் அதிகாரம் சட்டமன்ற மற்றும் மாநில அமைச்சரவை முடிவுகளுக்கேற்ப இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காமாலைக்கண் பார்வை போன்றது என ஆளுநர் கூறியது ஒட்டுமொத்த தமிழர்களை விமர்சிப்பது போன்று உள்ளது. நீட் தேர்வு விலக்கில் இருந்து நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு முயற்சி செய்தே ஆக வேண்டும்" என்றார். 

 

புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி கூறியதாவது, "நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்" என்றார். 

 

நீட் விலக்கு மசோதாவுக்கு இதுவரை தமிழக வாழ்வுரிமை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  


 

சார்ந்த செய்திகள்